முதன்மைப் பக்கம்


போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில், பார்வையற்றோரைப் பொதுச்சமூகத்தோடு சரிநிகரென ஒருங்கிணைப்பதில் பொருளாதாரத் தற்சார்பு முக்கியப் பங்காற்றுகிறது.

பார்வையற்றோருக்கான பணிப்பாதுகாப்பும், உறுதியான ஊதியமும் அவர்கள் ஒவ்வொருவரையும் வாழ்வின் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி இட்டுச் செல்கிறது. 

மாறிவரும் சூழலுக்கேற்ப தற்போது மைய மாநில அரசுகளின் பெரும்பாலான பணிவாய்ப்புகள் தேர்வுகளை மையப்படுத்தியதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

மாறிவரும் சூழலுக்கேற்ப தற்போது மைய மாநில அரசுகளின் பெரும்பாலான பணிவாய்ப்புகள் தேர்வுகளை மையப்படுத்தியதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில்,அத்தகைய தேர்வுக்குத்தன்னைத் தயார்ப்படுத்துவதில் ஒரு சாதாரணத் தேர்வருக்கு கொட்டிக்கிடக்கிற எளிமையான வாய்ப்புகள் பார்வையற்றவர்களுக்கு இல்லை என்பதே நிதர்சனம். அதாவது, சமமற்ற வாய்ப்பு, சமமான போட்டி.


நோக்கம்

இந்த இடைவெளியைச் சரிசெய்வதில் கடுகளவேனும் பங்காற்றிட விழைகிறது ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம். அதனால்தான் தனது கற்பித்தல் எல்லைகளை வரம்பிட்டு, தற்போதைக்கு தமிழ்நாடு பணியாளர்த் தேர்வாணையத் தேர்வுகளை இலக்காகக்கொண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பயிற்சி வழங்குவது என முடிவுசெய்யப்பட்டுள்ளது. பரிசு அல்ல, பங்கேற்பை உறுதிசெய்வதே முதல் நோக்கம்.

செயல்பாடுகள்

  • பார்வையற்றோர் தேர்வுகளை எளிதில் அணுகும் வண்ணம், அவர்களுக்கான வகுப்புகளை இணைய வழியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒருங்கிணைத்து வருகிறோம்.
  • ஒவ்வொரு பாடப்பிரிவையும் அதற்கே உரிய தேர்ந்த வல்லுநர்களைக்கொண்டு கற்பித்து வருவதோடு, அந்த வகுப்புகளைப் பதிவுசெய்து யூட்டூப் மற்றும் டெலகிராம் தளங்களில் பதிவேற்றியும் வருகிறோம்.

எங்களைப் பற்றி

ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தால் கடந்த 09/09/2020 அன்று ஹெலன்கெல்லரின் பெயரிலேயே இந்த பயிற்சிமையம் தொடங்கப்பட்டது. எனினும், கற்பித்தலையே முதன்மைப் பணியாகக்கொண்டிருப்பதால், உலகின் தலைசிறந்த ஆசிரியரும், ஹெலன்கெல்லரை உலகறியச் செய்தவருமான தி மிராக்கில் வொர்க்கர் என்று போற்றப்படும் ஆன்சலிவன் அம்மையார் அவர்களின் பெயரையே இந்தப் பயிற்சி மையத்துக்குச் சூட்டுவது பொருத்தமானது என உணர்ந்தோம். எனவே, மையத்தின் முதலாம் ஆண்டு நிறைவில் ஹெலன்கெல்லர் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம் (CCC by Helenkeller), ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம் (Anne Sullivan Coaching Centre for Competitive Exams Anne Sullivan CCC) என பெயர் மாற்றம் பெற்றது.

முக்கிய முன்னெடுப்பு

தமிழ் மொழியில் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் ஒரு பார்வையற்ற தேர்வர், அவற்றிற்கான கற்றல் மூலங்கள் (Study Materials), மாதிரி வினாத்தாள்கள் என இணையவழியில் தேடப்புகுந்தால், இறுதியில் அவருக்கு விரக்தியே எஞ்சுகிறது. காரணம், போட்டித்தேர்வுகள் தொடர்பான பெரும்பாலான இணையதளங்கள் பிடிஎஃப் கோப்புகளையே அதிகம் கையாளுகின்றன. அச்சுப்பிரதிகளை அப்படியே படம் எடுத்து அதைப் பதிவேற்றிவிடுகிறார்கள். இணையத்தைத் திரைவாசிப்பான்கொண்டு அணுகும் ஒரு பார்வையற்றவரின் இந்த முதன்மையான சிக்கலைத் தீர்க்கும் நோக்கத்தோடு இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கற்றல் மூலங்கள் திரைவாசிப்பான்கள் எளிதில் அணுகும் ஒருங்குறி வடிவில் வழங்கப்படும். மேலும், அவ்வப்போது நடத்தப்படும் மாதிரித்தேர்வுகள், தேர்வுக்குப்பிறகான வினாவிடைப்பகுதிகள், என போட்டித்தேர்வுகள் தொடர்பான ஒரு ஆவனத்தொகுப்பகத்தைப் படிப்படியாய் உருவாக்கிடும் திட்டத்தின் முதற்படியே இந்த இணையதளம்.


தொகுதி-IV 100 நாள் தயாரிப்பு அட்டவனை

TNPSC தொகுதி-IV தேர்வுக்கான எளிமையான மற்றும் விரிவான 100 நாள் தயாரிப்புத் திட்டம்.

அட்டவனையைப் பார்க்க இதைச் சொடுக்குங்கள்.